கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டைப் பகுதியில் அதிகபட்சமாக 4 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது
தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதால், கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம், “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும்,
வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, கரூர், தர்மபுரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டைப் பகுதியில் அதிகபட்சமாக 4 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.