This Article is From May 13, 2020

'கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல; ஆய்வகத்திலிருந்து பரவியது' - மத்திய அமைச்சர்

கொரோனாவை எதிர்த்து போர் செய்யும் அதே நேரத்தில் நாம், பொருளாதார பிரச்னைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்திய ஏழ்மை நாடு. நம்மால் மாதக்கணக்கில் பொது முடக்கத்தை ஏற்படுத்த முடியாது. 

கொரோனா வைரசுடன் வாழ்வதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் நிதின் கட்கரி.

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து பரவியதாக நிதின் கட்கரி தகவல்
  • தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே பிரச்னை முடிவுக்கு வரும்
  • கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்கிறார் நிதின் கட்கரி
New Delhi:

உலகையே அச்சுறுத்திக் கொண்டு வரும் கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல என்றும், ஆய்வகத்திலிருந்து பரவியது என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தொழில் துறைக்கு உதவும் வகையில் ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான 'தற்சார்பு இந்தியா' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்வழியே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த பல முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதுகுறித்து என்.டி.டி.வி.க்கு மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

கொரோனா வைரசுடன் வாழ்வதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இது இயற்கையான வைரஸ் அல்ல. செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட இந்த வைரஸ் இன்று பல நாடுகளை பாதித்துள்ளது. 

கொரோனா வைரசுக்காக தடுப்பு மருந்துகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். தற்போது அதைத் தடுக்கும் மருந்து ஏதும் இல்லை. அது கிடைத்தால் மட்டுமே பிரச்னையில் இருந்து நாம் முழுமையாக வெளியே வர முடியும். விரைவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். 

அடுத்த பிரச்னை என்னவென்றால் கொரோனா வைரஸ் ஒருவரை பாதித்திருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடிப்பது. சிலருக்கு அறிகுறியே இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கொரோனா பாதிப்பை கண்டறியும் எளிய வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் இது இயற்கை வரைஸ் அல்ல. ஆய்வகத்திலிருந்து பரப்பப்பட்டது. இதனை உலகமும், இந்தியாவும் எதிர்கொள்வதற்கு தயாராகி விட்டன. அறிவியலாளர்களும் தயாராகி விட்டார்கள். 

கொரோனாவை எதிர்த்து போர் செய்யும் அதே நேரத்தில் நாம், பொருளாதார பிரச்னைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்திய ஏழ்மை நாடு. நம்மால் மாதக்கணக்கில் பொது முடக்கத்தை ஏற்படுத்த முடியாது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவை சரி செய்வதற்காக ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் திட்டம் குறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். 

இதன்படி, 'சிறு குறு தொழில்துறைக்கு ரூ. 3 லட்சம் கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கப்படும். கடனுதவி திட்டம் அக்டோபர் 31-ம்தேதி வரை செயல்படுத்தப்படும். வட்டிக்கு ஓராண்டு கால அவகாசம்அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு பிணை தேவையில்லை. இதனால் 45 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெறும். 

ரூ. 100 கோடி வியாபாரம் உள்ள சிறு தொழில்களுக்கு ரூ. 25 கோடி வரை கடன் இருந்தால் அந்த நிறுவனத்திற்கு கூடுதல் கடன் வழங்கப்படும். 

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்துறைக்கு ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும். ரூ. 2 லட்சம் வரையில் சிறு தொழில் துறையினர் கடன் பெற்றுக் கொள்ளலாம்.' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

.