Chennai: சென்னை: இந்தியாவின் முதல் காற்று சுத்திகரிப்பான் கருவி, சென்னை ஐஐடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் உள்ள ஏர்.ஓக்கே தொடக்க நிறுவனம் ‘விஸ்டர்’ எனப் பெயரிடப்பட்ட காற்று சுத்திகரிபான் கருவியை வடிவமைத்துள்ளது. இந்த கருவி காற்றிலுள்ள துகள்கள், மைக்ரான்கள், கிருமிகள் போன்ற பொருள்களை வடிகட்டி சுத்தமான காற்று அளிக்கும் திறன் பெற்றுள்ளது.
இந்த கருவி, மருத்துவமனைகள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை போன்ற இடத்தில் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது குறித்து பேசிய பேராசிரியர் அசோக் ஜூன்ஜூன்வாலா, “550 சதுர அடி பரப்பளவில் உள்ள இந்த கருவியின் காற்று சுத்திகரிப்பான் வடிகட்டி ஒரு வருடம் பயன்படுத்தலாம்” என்றார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக, உடல்நல பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. எனவே, காற்று சுத்திகரிப்பான் கருவி தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. ஐஐடியில் உருவாக்கப்பட்டுள்ள விஸ்டர் 550, சந்தை விற்பனைக்கு 20,000 ரூபாய்க்கு வர உள்ளது.
ஏர்.ஓக்கே நிறுவனம், ஒரு நாளைக்கு 30 கருவிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. லிவ்ப்யூர் நிறுவனத்தை சேர்ந்த எஸ்ஏஆர் குழு, ஏர்,ஓக்கே நிறுவனத்தின் சந்தை விற்பனை பங்குதாரராக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“ஏர்.ஓக்கேவின் விஸ்டர் 550 உருவாக்க வளர்ச்சியை நான் கண்டுள்ளேன். உலக தரம் கொண்ட அளவு, நம் நாட்டிலேயே காற்று சுத்திகரிப்பான் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. சந்தையில் நல்ல விற்பனையை பெறும் என நம்புகிறோம்” என்று ஐஐடி சென்னை இயக்குனர் பாஸ்கர் இராமமூர்த்தி தெரிவித்தார்.
விஸ்டர் 550 கருவி, சோதனை தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளது. எளிதான முறையில் மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றது என ஐஐடி சென்னையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.