General elections 2019: தனது தாயிடம் ஆசி பெற்றார் மோடி.
ஹைலைட்ஸ்
- உங்கள் வாக்குகள் விலைமதிப்பற்றவையாகும், என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- 3ஆம் கட்ட தேர்தலில் அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார்.
- ராகுல், அமித்ஷா போட்டியிடும் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
New Delhi: மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, தனது தாயிடம் ஆசி பெற்றார்.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் 3-ஆவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். காந்திநகரில் உள்ள தனது தாயின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது தன்னை பார்ப்பதற்கு வீட்டின் முன் கூடியிருந்த மக்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பின்னர் அங்கிருந்து ஜீப்பில் புறப்பட்ட பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நிஸான் பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார்.