தனது மனைவி சோனால் ஷா உடன் அமித்ஷா குஜராத்தில் வாக்களித்தார்.
Ahmedabad: மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அமித்ஷா, அகமதாபாத்தில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். நாட்டின் பெருளாதாரத்தை உயர்த்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அகமதாபாத்தில் உள்ள நரன்பூரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த அமித்ஷா, இந்த ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும், பெரும் அளவில் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அவருடன் அவரது மனைவியும், வாக்களிக்க வருகை தந்திருந்தார்.
நாட்டின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவுக்கு மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் எழுந்துள்ளது. இதேபோல், குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளிலும் மக்கள் உற்சாகத்துடன் வாக்களிக்க வருகை தருவதாக நான் உணர்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 3-ஆவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். அங்கு காந்திநகரில் உள்ள தனது தாயின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.