வரும் 11 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்
New Delhi: தெலங்கானாவில் இருக்கும் 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் இருக்கும் 199 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை, பாஜக மீண்டும் ஆட்சியில் அமர முயற்சி மேற்கொண்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, ‘என் தலைமையிலான அரசு மக்களுக்காக கடுமையாக உழைத்துள்ளது. எனவே நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தெலங்கானாவில், சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மீண்டும் வெற்றி பெற தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டிருந்தது. தெ.ரா.ச கட்சிக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், காங்கிரஸும் கூட்டு சேர்ந்துள்ளது. தெலங்கானாவில் காலை 9 மணி வரை, 8.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
முக்கிய 10 தகவல்கள்:
1.ராஜஸ்தானில், ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுக்கு எதிராக மக்கள் கொதிப்பில் உள்ளனர் என்றும், ஆகையால் தாங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் காங்கிரஸ் தரப்பு கூறி வருகிறது.
2.'அமித்ஷா மற்றும் மோடி எவ்வளவு தீவிரமாக மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்தாலும், வசுந்தரா ராஜேவின் முறையற்ற ஆட்சிக்கு எதிரான மன நிலையை அவர்களால் மாற்ற முடியாது' என்று ராஜஸ்தான் மாநில தேர்தல் பொறுப்பாளர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
3.இந்த குற்றச்சாட்டு குறித்து வசுந்தரா ராஜே, ‘என் தலைமையிலான அரசு, நல்ல ஆட்சியை வழங்கியதில் என்பதில் எனக்குத் துளியளவும் சந்தேகமில்லை' என்று கூறியுள்ளார்.
4.தெலங்கானாவில், ஆட்சிக்கான காலக்கட்டம் முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்னரே சட்டசபையைக் கலைத்தார் சந்திரசேகர் ராவ். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலின் தாக்கம், மாநில தேர்தலில் எதிரொலித்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை என்று பரவலாக கூறப்படுகிறது.
5.கடந்த முறை நடந்த தேர்தலில், கேசிஆரின் கட்சி 63 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 21 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 15 இடங்களிலும் வெற்றி பெற்றது.
6.ராஜஸ்தானைப் பொறுத்தவரை, 1993 ஆம் ஆண்டு முதல் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸும் பாஜக-வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன
7.ராஜஸ்தானில், காங்கிரஸ் தரப்பில் யார் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படவில்லை. இது குறித்து பைலட் பேசுகையில், ‘தேர்தலில் நாங்கள் பெரும்பான்மை பெற்ற பிறகு முதல்வர் குறித்து ஆலோசிப்போம்' என்றுள்ளார். அஷோக் கெலோட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக பார்க்கப்படுகின்றனர்.
8.தெ.தே.க - காங்கிரஸ் கூட்டணி தெலங்கானாவில் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் அது எதிரொலிக்கும் எனப்படுகிறது. சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி அணி அமைய தொடர்ந்து பேசி வருகிறார். கேசிஆர், காங்கிரஸ் - பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைய வேண்டும் என்று சொல்லி வருகிறார்.
9.தெ.தே.க, தெலங்கானாவில் 13 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், அக்கட்சியின் வேட்பளரே முதல்வராக பொறுப்பேற்பார் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
10.வரும் 11 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். தெலங்கானாவுடன் சேர்த்து, மிசோரம், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் அன்றே அறிவிக்கப்படும்.