அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் முக்கிய குற்றவாளி கிரிஸ்டியன் மைக்கேல் ஆவார்.
New Delhi: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேரத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை துபாய் அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. செவ்வாயன்று நள்ளிரவு டெல்லி வந்த அவரிடம் சிபிஐ தலைமையகத்தில் வைத்து நள்ளிரவு முழுவதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்தியாவில் முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக 3,600 கோடி ரூபாய் மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற இத்தாலி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
கிறிஸ்டியன் மைக்கேல் 54, தனி விமானம் மூலம் அழைத்துவரப்பட்டார். இதுகுறித்து, கிறிஸ்டியனின் வழக்கறிஞர் ரோஸ்மேரி பேட்ரிசி என்டிடிவியிடம் கூறும்போது, இன்டர் போல் அறிவிப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்ட மைக்கேல் பிணையில் வெளிவந்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவாலின், வழிகாட்டுதலின் கீழ் மைக்கேல் ஒப்படைக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, குடியரசுத் தலைவர், பிரதமர், முன்னாள் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் விஐபிக்கள் பயணிப்பதற்காக 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.