Chennai Bus Strike: ஜூன் மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் முழு ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
Chennai: Bus Strike: சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் ஓடவில்லை.
23,000 போக்குவரத்து ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நகரில் இயங்கி வந்த 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்கள் ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய பிரச்சனை எழுந்துள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு, மாத இறுதியில் ஊதியம் வழங்கப்படும். ஆனால், ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்னும் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை, என்றும் ஒரு சிலருக்கு முழு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இன்று காலை முதல் பேருந்தை இயக்க ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மறுத்துவிட்டனர்.
சென்னை மாநகரில் சுமார் 3500 பேருந்துகள் இயங்கவில்லை. அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் திருமங்கலம் ஆகிய பணிமனைகளில் இருந்து 850 பேருந்துகள் இயங்கவில்லை.
இந்த திடீர் வேலை நிறுத்தம் காரணமாக பேருந்து பயணத்திற்காக காத்திருக்கும் பொது மக்கள் கடும அவதியுற்று வருகின்றனர். இதனால், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் இதர பலர் ரயில், ஷேர் ஆட்டோ உள்ளிட்டவற்றின் மூலம் கடும் நெரிசலில் சென்று வருகின்றனர்.
எனினும், ஊதியம் குறைக்கப்படவில்லை என்று கூறும் தமிழக அரசு, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்களுக்கு ஏற்கனவே முழு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. மேலும் மீதமுள்ள தொகை இன்று வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. வார இறுதியில் வங்கிகள் மூடப்பட்டதால் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது.