இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க காவலர் ரோனில் சிங்
Washington: அமெரிக்கா - மெக்சிகோ சுவர் விவகாரத்தில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க காவலரின் உயிரிழப்பை சுட்டிக் காட்டி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளார்.
சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக அமெரிக்கா - மெக்சிகோ இடையே சுவர் கட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதிபர் வேட்பாளராக இருக்கும்போதே அமெரிக்கா - மெக்சிகோ இடையே சுவர் கட்டுவேன் என்று ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
அமெரிக்கா மெக்சிகோவிக்கு இடையேயான எல்லை ஓரத்தில் சுமார் 1,552 கிலோமீட்டர்களுக்கு இந்த சுவர் எழுப்படவுள்ளது. இதற்கான பணி 2027-ல் நிறைவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க காங்கிரசிடம் சுவர் கட்டுவதற்காக 5.7 பில்லியன் தொகையை ட்ரம்ப் கேட்டு வருகிறார். சுவர் கட்டுவதற்கான அவசியம் குறித்து ட்ரம்ப் தொடர்ந்து பேசுகிறார். அப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பூர்வீக காவலரை குறிப்பிட்டு ட்ரம்ப் பேசினார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், '' இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 33 வயது காவலர் ரோன் சிங் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக வந்த கஸ்தாவே பெரஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் ட்ராபிக்கை சரி செய்து கொண்டிருந்தபோது ரோனுக்கு இந்த சம்பவம் நடந்தது.
ரோனின் உயிரிழப்பு அமெரிக்க மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அமெரிக்க வீரனான ரோனின் உயிர், இந்த நாட்டின் மீது சற்றும் உரிமை இல்லாத, யாரோ ஒரு சட்டவிரோதமாக குடியேறிய ஒருவரால் பறிக்கப்பட்டிருக்கிறது. மெக்சிகோ எல்லையில் சுவர் அமைப்பது என்பது மிக முக்கியமான பிரச்னை'' என்று ட்ரம்ப் கூறினார்.
கடந்த வாரம் ரோனில் சிங்கின் மனைவி அமானிகா மற்றும் அவருடன் பணியாற்றிய வீரர்களை சந்தித்து ட்ரம்ப் பேசினார். ரோனில் சிங்கை கொன்ற கஸ்தவா பெரேஸ் கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.