Chennai: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது நிலை குறித்து அறிய ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவமனை வளாகத்துக்கு வெளியிலேயே காத்துக் கொண்டிருக்கின்றனர். நேற்று இரவு அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய பின்னரும் கலைந்து செல்லாமல் காத்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவு காரணமாக பொது வாழ்விலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இந்நிலையில் அவர், இம்மாதம் 18-ம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியஸ்டமி கருவி நீக்கப்பட்டு பதிய கருவி பொருத்தப்பட்டது. அதையடுத்து, அவர் அன்று இரவே வீடு திரும்பினார். மீண்டும், சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதியின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், ‘சிகிச்சைக்குப் பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என திமுக-வின் செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர்.
ஆனால், சனிக்கிழமை ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் மோசமானது. அதனால், அவர் மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை தேறியுள்ளதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து அவருக்கு மருத்துவக் குழு சிகிச்சை கொடுத்து தீவிர கண்காணிப்பில் வைத்து வருகிறது. நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. தொடர் சிகிச்சையால், அவரது உடல் நலம் சீராகி வருகிறது. மருத்துவக் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும் மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே குவிந்து வருகின்றனர். இதனால், அங்கு ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. நேற்று தொண்டர்களுக்கும் போலீஸுக்கும் தள்ளுமுள்ளு நடக்கவே, அவர்கள் மீது காவல் துறை லேசான தடியடி நடத்தியது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனைக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கும் திமுக தொண்டர் ஒருவர், ‘கடந்த 3 நாட்களாக நாங்கள் உணவு, நீரின்றி இங்கு காத்திருக்கிறோம். எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்கள் தலைவரைக் காண்பித்தால் போதும். ஏன் அவரது நிலை குறித்து தெளிவாக எங்களுக்கு எடுத்துக் கூறப்படவில்லை. எங்களுக்கு அவர் திரும்ப வேண்டும்’ என்று கொந்தளித்தார்.
அதே நேரத்தில், ஆ.ராசாவின் உதவியாளர் மணிகண்டன், ‘தொண்டர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் போலீஸாருடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம். தலைவரின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று கூறினார்.
காவேரி மருத்துவமனைக்கு வெளியே தொடர்ந்து திமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவக் குழு கவனித்து வருகிறது.