This Article is From Oct 23, 2018

முற்றும் பனிப் போர்… சிபிஐ இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு!

சிபிஐ அமைப்புக்குள் இருக்கும் உச்சபட்ச அதிகாரிகளுக்கு மத்தியில் பிரச்னை எழுந்த நிலையில், இருவருக்கும் சம்மன் அனுப்பினார் பிரதமர் மோடி

முற்றும் பனிப் போர்… சிபிஐ இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு!

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தப் பிறகு, சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா, அமைப்பின் சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவை சஸ்பெண்ட் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. சென்ற வார இறுதியில் இது குறித்தான கடிதத்தை சம்பந்தப்பட்டத் துறையிடம் அலோக் வெர்மா அனுப்பியுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரம் கூறுகிறது. சிபிஐ அமைப்புக்குள் இருக்கும் உச்சபட்ச அதிகாரிகளுக்கு மத்தியில் பிரச்னை எழுந்த நிலையில், இருவருக்கும் சம்மன் அனுப்பினார் பிரதமர் மோடி. இதையடுத்து சிபிஐ இயக்குநர் பிரதமரை கடந்த ஞாயிற்றுக் கிழமை சந்தித்தார். சில நாட்களுக்கு முன்னர் அஸ்தானா மீது லஞ்ச புகார் கூறி, எப்.ஐ.ஆர் பதிவு செய்தது சிபிஐ. அதற்கு முன்னர் அஸ்தானா, மத்திய அரசிடம், சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்:

  1. மத்திய அரசுக்கு அஸ்தானா குறித்து எழுதிய கடிதத்தில் அலோக் வெர்மா, ‘விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய நபர்' என்று குறிப்பிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து சிபிஐ பேச மறுத்து வருகிறது.
  2. கடந்த ஆண்டு அஸ்தானாவுக்கு, சிபிஐ-யின் மூத்த அதிகாரியாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டது. அவருக்கு எதிராக வழக்கு தொடர பிரதமரிடம் அனுமதி வாங்கப்படவில்லை என்றும் பிரதமர் அலுவலக வட்டாரம் கூறுகிறது.
  3. நேற்று சிபிஐ அதிகாரி தேவேந்திர குமாரை, அந்த அமைப்பு கைது செய்தது. தேவேந்திர குமார் அஸ்தானாவுடன் பணி புரிந்து வந்தவர். குமார், சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மாவுக்கு எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சிபிஐ, அதன் அலுவலகத்தின் பல்வேறு அறைகளில் சோதனை நடத்தியது. அஸ்தானாவுடன் நெருக்கமாக இருந்த சிபிஐ அதிகாரிகளின் அறைகள் சோதனையிடப்பட்டதாக கூறப்படுகிறது.
  4. சதிஷ் சனா என்கின்ற ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அளிக்க புகாரின் பேரில் தான் ராகேஷ் அஸ்தானா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது சிபிஐ. சனாவை சிபிஐ பணமோசடி வழக்கில் விசாரித்து வருகிறது.
  5. சனா, சில நாட்களுக்கு முன்னர் நீதிபதி முன்னர் ஆஜராகி, டிசம்பர் 2017 முதல் அக்டோபர் 2018 வரை, அஸ்தானாவுடன் தொடர்பு வைத்திருக்கும் இடைத்தரகரிடம் லஞ்சப் பணம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
  6. சனாவின் வாக்குமூலத்தை அடுத்து, இடைத்தரகரான மனோஜ் பிரசாத் கடந்த 16 ஆம் தேதி துபாயிலிருந்து விமானம் மூலம் வந்த போது கைது செய்யப்பட்டார்.
  7. சோமேஷ் பிரசாத்தையும் சிபிஐ விசாரித்து வருகிறது. சோமேஷ் மற்றும் மனோஜ், ரா புலனாய்வு அமைப்பின் முன்னாள் அதிகாரியின் மகன்கள் ஆவார்கள். இந்த வழக்கில் ரா அமைப்பின் பங்கு குறித்தும் சிபிஐ விசாரித்து வருவதாக தகவல்.
  8. கடந்த ஆகஸ்ட் மாதம் ராகேஷ் அஸ்தானா அரசுக்கு அளித்த புகாரில், ‘சிபிஐ தான் சனாவிடமிருந்து லஞ்சப் பணம் வாங்க முயன்றுள்ளது. குறிப்பாக அதன் தலைவர் அலோக் வெர்மா இதில் சம்பந்தப்பட்டுள்ளார். ஆனால், இந்த வழக்கில் என்னை சிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று பகீர் குற்றச்சாட்டை சுமத்தினார்.
  9. அஸ்தானா, சதிஷ் சனாவை விசாரிக்கும் போது, அவர், ‘சிபிஐ இயக்குநருக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டதாக' அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டை சிபிஐ தரப்பு மறுத்துள்ளது.
  10. கடந்த ஆண்டு அஸ்தானாவை சிறப்பு இயக்குநராக நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்த போது, அதற்கு சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதிலிருந்து இருவருக்குமான பனிப் போர் தொடங்கியது.

.