திடீரென்று ஒரு குழந்தை மேலே இருந்து ‘தொப்’ என்று ரிக்ஷாவுக்குள் விழுவதும் நடக்கிறது
Tikamgarh: மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து 3 வயது நிரம்பிய குழந்தை தவறுதலாக கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை பெரிய காயங்கள் படாமல் உயிர் தப்பியது. அந்த குழந்தை உயிர் பிழைத்ததற்கு முக்கிய காரணம், அப்போது மாடிக்குக் கீழே சென்ற ரிக்ஷா வண்டிதான். சரியான நேரத்தில் சரியான இடத்தில் வந்த ரிக்ஷா வண்டியால் உயிர் தப்பியது அந்த குழந்தை. இந்த சம்பவத்தின் திக் திக் வினாடிகள் சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
வீடியோவில், ஒருவர் சைக்கிள் ரிக்ஷாவை தள்ளிக் கொண்டு வருவதைப் பார்க்க முடிகிறது. திடீரென்று ஒரு குழந்தை மேலே இருந்து ‘தொப்' என்று ரிக்ஷாவுக்குள் விழுவதும் நடக்கிறது. இதனால் திகைப்படையும் ரிக்ஷாகாரர், செய்வதறியாமல் முழிக்கிறார். குழந்தையை அவர் கையிலெடுக்கும் போதே, அக்கம் பக்கத்தினர் ரிக்ஷாவுக்கு அருகில் வந்துவிடுகின்றனர்.
“எங்கள் குடும்ப உறவினர்களுடன் எனது மகன் விளையாடிக் கொண்டிருந்தான். என் அப்பாவும், சகோதரியும் கூட அங்குதான் இருந்தனர். திடீரென்று பால்கனியிலிருந்து தொங்கியபடி அவன் விளையாடியுள்ளான். ஒரு கட்டத்தில் அவன் தடுமாறி கீழே விழுந்தான்…
அப்போதுதான் கடவுள் போல ரிக்ஷாகாரர் வந்து அவனைக் காப்பாற்றினார். உடனடியாக என் மகனை நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ் ரே எடுத்து சோதனை செய்தோம்” என்று சம்பவம் குறித்து விவரிக்கிறார் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையான ஆஷிஷ் ஜெயின்.
இந்த சம்பவத்தால் 3 வயது குழந்தைக்குப் பெரிதாக காயம் ஏற்படவில்லை என்று அவனை சோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
With input from ANI