பெமா காண்டு ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டார் 650 பைக்கை ஓட்டிச்செல்லும் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
New Delhi: பசுமையான பின்னணி, அழகிய நிலப்பரப்பு மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் மலைப்பாதை சாலைகள் வழியாக வேகமாக செல்லும் ஒரு பைக். அந்த பைக்கை ஓட்டிச் செல்பவர் சாதாரண வாகன ஓட்டி அல்ல. அவர் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வர் பெமா காண்டு.
ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டார் 650-ஐ ஓட்டிச் செல்லும் வீடியோவை வெளியிட்ட பெமா காண்டு, இது அருணாச்சல பிரதேசத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான தனது "தாழ்மையான முயற்சி" என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் பெமா காண்டு தனது ட்வீட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில், அருணாச்சல பிரதேச மாநிலத்தின் யிங்கியோங்கில் இருந்து பசிகாட் வரை ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார் சைக்கிளில் பெமா காண்டு பயணம் செய்கிறார்.
இது 122 கிலோமீட்டர் தொலைவு கொண்ட சாலையாகும். இது அருணாச்சலில் உள்ள மேல் சியாங் மாவட்டத்தின் தலைமையகத்தில், வளமான நிலப்பரப்பு மற்றும் அமைதிக்கு பிரபலமான இடமாகும்.
இந்த பயணம் தொடர்பாக பெமா காண்டு தனது பதிவில், "பைக்கிங் மற்றும் சாகச விளையாட்டுகளுக்கான கனவு இடமாக அருணாச்சல் பிரதேசத்தை உயர்த்துவதற்கான என்னுடைய ஒரு தாழ்மையான முயற்சி" என்று அவர் தெரிவித்துள்ளார்.
யிங்கியோங்கில் இருந்து பசிகாட் வரை 122 கி.மீ கொண்ட இந்த பயணத்தை கடந்த அக்.13ம் தேதி மேற்கொண்டேன். யிங்கியோங் சர்கியூட் ஹவுசில் இருந்து காலை 8 மணி அளவில் பயணத்தை தொடங்கினேன். தொடர்ந்து, காலை 10.30 மணி அளவில் பசிகோட் விமான நிலையத்தை அடைந்தேன். இந்த பாதை சியாங் பள்ளத்தாக்கு மற்றும் ஆதி கிராமங்களின் சிறந்த அழகிய காட்சிகளை வழங்குகிறது "என்றும் காண்டு குறிப்பிட்டுள்ளார்.
அருணாச்சல பிரதேச முதல்வர் காண்டு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்வது முதல்முறையல்ல, அவர் கடந்த காலங்களிலும் மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ஓட்டி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு, நடிகர் சல்மான் கானுடன் இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்றார்.
பெமா காண்டு, தனது சமூகவலைதள பக்கங்களை, அருணாச்சல பிரதேச சுற்றுலாவை ஊக்கவிக்கவே பெரிதும் பயன்படுத்தி வருகிறார். மேலும், இதற்காக #AmazingArunachal மற்றும் #VisitArunachal உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளையும் அவர் பயன்படுத்தி வருகிறார்.