This Article is From Apr 11, 2019

வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த ஆந்திர வேட்பாளர் கைது! - பரபரப்பு வீடியோ

ஆந்திர பிரதேசத்தில் 175 உறுப்பினர்களுக்கான சட்டசபை தேர்தலும், 25 உறுப்பினர்களுக்கான மக்களவைத் தேர்தலும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

ஜனசேனா வேட்பாளர் மதுசூதன் குப்தா வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தார்.

Amaravati:

ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த ஜனசேனா வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19–ந் தேதி வரை ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 18 மாநிலங்களிலும், 2 இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் 91 தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடந்து வருகிறது.

இதேபோல் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் இன்று வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. இதற்காக காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குண்டக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்ய சென்ற ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, வாக்குப்பதிவு எந்திரத்தை தரையில் போட்டு உடைத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

ஆந்திராவின் கூட்டி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில், சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் சரியான முறையில் இடம்பெறவில்லை என்று கூறி, தேர்தல் அதிகாரி களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை தரையில் தூக்கி எறிந்து உடைக்கிறார். இந்த சம்பவத்தில் வாக்குப் பதிவு எந்திரம் முற்றிலும் சேதமடைகிறது. இதைத்தொடர்ந்து, போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர்.

ஆந்திர பிரதேசத்தில் 175 உறுப்பினர்களுக்கான சட்டசபை தேர்தலும், 25 உறுப்பினர்களுக்கான மக்களவைத் தேர்தலும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, ஆந்திராவில் பல இடங்களில் வாக்குப் பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் தாடேபாலியில் வாக்குப்பதிவு செய்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறும்போது, 50க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அந்த மையங்களில் தொடர்ந்து தொழில்நுட்ப குழு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

மேலும், அவர் கூறும்போது 4 கோடி வாக்காளர்கள் உள்ள ஆந்திர மாநிலத்தில் 18 முதல் 19 வரை உள்ள புதிய வாக்காளர்கள் 10 லட்சம் பேர் புதிதாக வாக்களிக்க உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

ஆந்திராவில் நடைபெறும் தேர்தலில் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதே போல மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதியில் 2,118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

(With inputs from IANS and PTI)

.