Iran missile attack: Iran missile attacks: இரவு சூழ்ந்த நேரத்தில் ஏவுகணைகள் பாய்ந்து வருவதால் வானம் மின்னுவதைப் பார்க்க முடிகிறது.
ஹைலைட்ஸ்
- ஈரான் ஏவுகணைகள் அமெரிக்கப் படை இருந்த இடத்தைத் தாக்குவது தெரிகிறது
- முன்னதாக ஈரான் தளபதி கொல்லப்பட்டது குறிப்பிட்டத்தக்கது
- அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது
New Delhi: Iran missile attacks: ஈரான், புதன்கிழமையன்று அமெரிக்க ராணுவப் படையினர் இருந்த ஈராக் ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க மற்றும் ஈரான் அரசுகள் உறுதிபடுத்தியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் ஈரான் ராணுவத் தளபதி, அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இந்த ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. சுமார் 12 ஏவுகணைகளைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்கப் படையினர் இருந்த ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைகள் விழுவது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.
வீடியோவில், ஏவுகணைகள் ராணுவத் தளத்தைத் தாக்கும்போது, மக்கள் அலறுகின்றனர். இரவு சூழ்ந்த நேரத்தில் ஏவுகணைகள் பாய்ந்து வருவதால் வானம் மின்னுவதைப் பார்க்க முடிகிறது.
இந்த திடீர் தாக்குதல் பற்றி அமெரிக்க அரசு, “ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவம் மற்றும் கூட்டணிப் படைகள் மீது ஈரான், பல ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போது எந்தளவுக்குச் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், “அல்-அசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் இருந்த ராணுவத் தளங்கள் மீதுதான் ஈரான் குறிவைத்துள்ளது. இந்த இடத்தில் ஈரான் தரப்பு தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்த்து நாங்கள் உஷார் நிலையில்தான் இருந்தோம்,” என்றும் கூறியுள்ளது.
இந்த தாக்குதல் உயிரிழப்பு எதுவும் நிகழ்ந்ததா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதை அடுத்து, இரு நாடுகளும் போர் முழக்கங்கள் இட்டு வருகின்றன. இதனால், அமெரிக்க தரப்பு ஈரான் தாக்குதலை எதிர்பார்த்தே காத்திருந்ததாக தெரிகிறது.
முன்னதாக, ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.
ஈரான் அரசு தரப்பு இத்தாகுதல் பற்றி, “எங்கள் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. மேலும் இறப்புகளைத் தடுக்க அமெரிக்க தரப்பு இப்பகுதியிலிருந்து தங்களது துருப்புகளை பின்வாங்கச் செய்ய வேண்டும்,” என்று தனது அதிகாரபூர்வ டிவி சேனல் மூலம் கூறியுள்ளது.