This Article is From Mar 01, 2020

விமானத்திற்குள் புகுந்து பயணிகள், ஊழியர்களுக்குப் போக்கு காட்டிய புறாக்கள்! வைரல் வீடியோ

GoAir Airline: விமானத்திற்குள் புறா புகுந்ததால் அகமதாபாத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு மாலை 6.15-க்கு செல்ல வேண்டிய விமானம் 6.45-க்கு சென்று சேர்ந்தது.

புறாவை பிடிக்க பயணிகள் முயற்சி செய்தனர். ஆனால் அது சிக்கவில்லை.

ஹைலைட்ஸ்

  • விமானம் பறக்கத் தயாரானபோது புறாக்கள் உள்ளே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
  • ஊழியர்கள், பயணிகள் முயன்றும் புறாவை பிடிக்க முடியவில்லை
  • விமானத்தின் கதவை திறந்து புறாக்களை ஊழியர்கள் வெளியேற்றினர்
New Delhi:

விநோதமான சம்பவமாக 2 புறாக்கள் விமானத்திற்குள் புகுந்து கொண்டது. இதனைப் பிடிக்க முடியாமல் பயணிகளும், ஊழியர்களும் திணறினர். கடைசியில் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் புறா வெளியேற்றப்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு நேற்று மாலை கோ ஏர் விமானம் மாலை 5 மணிக்குப் புறப்படத் தயாரானது. அப்போது, அதற்குள் 2 புறாக்கள் புகுந்திருப்பதை பணியாளர்கள் பார்த்துள்ளனர். இதன்பின்னர், அதனைப் பிடிக்கும் முயற்சியில் பயணிகளும், ஊழியர்களும் ஈடுபட்டனர். 

புறாக்கள் இந்த மூலைக்கும், அந்த மூலைக்கும் பறந்து போக்கு காட்டின. இதனைப் பயணிகள் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பரவ விட்டு மகிழ்ந்தனர்.

சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் விமானத்தின் கதவுகள் வழியே புறாக்கள் பறந்து சென்றன.

விமானம் சரியாக மாலை 5 மணிக்குக் கிளம்பி 6.15-க்கு ஜெய்ப்பூரை அடைந்திருக்க வேண்டும். ஆனால் புறாக்கள் செய்த அட்டகாசத்தால் அரை மணி நேரம் தாமதமாக 6.45-க்கு விமானம் ஜெய்ப்பூரை அடைந்தது. 

இதனால் ஏற்பட்ட அசவுகரியத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக கோ ஏர் விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

விமானத்திற்குள் பறவைகள் புகுவது என்பது பொதுவாக நடப்பதில்லை. ஆனால் விமானம் பறக்கும்போது பெரிய அளவிலான பறவைகள் விமானத்தின் மீது பல முறை மோதியிருக்கின்றன. சில சமயம் எஞ்சின்களால் பறவைகள் உள்ளிழுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. 

Click for more trending news


.