தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் முன்னேற முயலும் காட்சி.
Chandigarh: பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இங்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் பதற்றம் காணப்படுகிறது. சண்டிகரில் உள்ள அமரிந்தர் சிங்கின் இல்லம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றது.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் அரசுக்கு எதிராக சிரோன்மணி அகாலி தளக் கட்சி தீவிர போராட்டம் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக ஆம் ஆத்மி கட்சியும் தற்போது போராட்டத்தில் குதித்திருக்கிறது.
சண்டிகரில் முதல்வர் வீடு அருகே நடைபெற்ற ஆம் ஆத்மி போராட்டத்தை கட்சியின் முக்கிய தலைவர் பகவந்த் மன் தலைமையேற்று நடத்தினார்.
பஞ்சாப் மாநிலத்தில் 2019-20-க்கான மின் கட்டணத்தை 2.14 சதவீதம் அளவுக்கு மின் வாரியம் உயர்த்தியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது. இதுதொடர்பாக மின் கட்டணம் குறைப்பு, தண்ணீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அக்கட்சி அளித்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது, 200 யூனிட் வரை ஒரு மாதத்திற்கு பயன்படுத்துவோருக்கு மின் கட்டணம் கிடையாது என்று கெஜ்ரிவால் அறிவித்தார். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1800 முதல் 2 ஆயிரம் வரையில் இழப்பு ஏற்பட்டது.
கடந்த 2015 பிப்ரவரியில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல் மின் கட்டணத்தில் 50 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மின் கட்டண சலுகை என்பது ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரசாரமாக உள்ளது.