This Article is From Jun 19, 2019

சென்னையில் கடும் வெயில், தண்ணீர் பஞ்சம்: மெட்ரோ தண்ணீர் 40 சதவீதம் நிறுத்தம்!

சென்னைக்கு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், 525 மில்லியன் லிட்டர் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலையில், குளிப்பது, துணி துவைப்பது என்பதெல்லாம் கேள்வி குறியாகியுள்ளது.

Chennai:

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டது. இதனால், சென்னை மெட்ரோ வாட்டர் குழாய்களில் வழங்கும் தண்ணீரை சுமார் 40 சதவீதம் நிறுத்தியுள்ளது.

கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் திணறி வருகின்றன.மேலும் தங்கும் விடுதிகளும் முடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிகையில் ஈடுபட்டுள்ளது.

இந்த சூழலில் இது குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசு விரிவான நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும் கூறினார். மேலும் சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரும் திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

காலி குடங்களுடன் பெண்கள் தண்ணீருக்காக அலையும் பரிதாபம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தண்ணீர் பஞ்சம் காரணமாக சென்னையில் பல ஓட்டல்களில் மதிய சாப்பாடு இல்லை என்ற போர்டு தொங்கவிடப்பட்டுள்ளது.

ஐடி நகரமான சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஐடி கம்பெனிகளுக்கு விடுமுறை அளிக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான கம்பெனிகள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி ஊழியர்களை அறிவுறுத்தி உள்ளன.

ஐடி கம்பெனிகளில் அனைத்து தளங்களிலும் செயல்பட்டு வந்த ரெஸ்ட் ரூம், இப்போது சில தளங்களில் மூடப்பட்டு உள்ளது. சில கம்பெனிகள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணி செய்யும்படி உத்தரவிட்டு உள்ளது.

நீர் நிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. ஏரி, ஆறு, வாய்க்கால் என அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால் நீர் ஆதாரம் குறுகிவிட்டது

சென்னைக்கு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 525 மில்லியன் லிட்டர் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இங்கு மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீருக்காக அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

.