சென்னை தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு தண்ணீரை வழங்குவதாக கேரள முதல்வர் கூறியிருந்தார்.
ஹைலைட்ஸ்
- சென்னைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தருவதாக கேரளா கூறியிருந்தது
- சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 80 கோடி லிட்டர் தண்ணீர் தேவையாக உள்ளது
- முல்லைப் பெரியாறு அணையில் நீரை தேக்குமாறு கேரளாவுக்கு தமிழகம் கோரிக்கை
Chennai: சென்னைக்காக கேரளா தரவிருக்கும் 20 லட்சம் தண்ணீர் போதுமானதாக இல்லை. இருப்பினும் உதவி செய்வதற்கு கேரளா எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை அளிப்பதாக கேரள முதல்வர் தெரிவித்திருந்தார். இதன்பின்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், 'தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக கூறியிருந்தோம். பதிலுக்கு அவர்கள் தங்களிடம் போதுமான தண்ணீர் இருப்பதாகவும், கேரளாவின் உதவி தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்' என்று பதிவிட்டிருந்தார்.
இதனால் இந்த விவகாரம் வைரலாக மாறி சமூக வலை தளங்களில் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் கேரளாவின் உதவி விவகாரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
20 லட்சம் லிட்டர் தண்ணீரை தருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் கேரளா வழங்குவதாக கூறும் தண்ணீர் சென்னைக்கு போதுமானது அல்ல.
சென்னையில் ஒவ்வொரு நாளும் 5,250 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒருவேளை தினந்தோறும் கேரளா 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்கினால் உதவிகரமாக இருக்கும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையில் கேரளா 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் நமக்கு தேவையாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் அதிக நீர் தேக்கி வைப்பதன் மூலம் தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்கள் பலன் பெறுவார்கள்.
இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில் தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மெட்ரோ வாட்டரில் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையின் தண்ணீர் தேவையை போக்கும் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
ஒரு நாளைக்கு சென்னைக்கு தினமும் 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. தற்போது மெட்ரோ வாட்டர் மூலம் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.