This Article is From Aug 17, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸின் இரண்டாவது எம்எல்ஏ!

Coronavirus: இந்த மாதத் தொடக்கத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, சிபிஎம் கட்சியின் மூத்த தலைவரான ஷியாமல் சக்ரோபர்த்தி கொரோனா தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா தொற்றால் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸின் இரண்டாவது எம்எல்ஏ!

இதுவரை மேற்கு வங்கத்தில் 1.16 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Kolkata:

மேற்கு வங்கத்தில் ஆட்சி புரிந்து வரும் திரிணாமுல் காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினரான சம்ரேஷ் தாஸ் என்பவர் கொரோனா வைரஸ் தொற்றால், 76 வயதில் உயிரிழந்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் எக்ரா சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்தவர் சம்ரேஷ் தாஸ். இந்த தொகுதியிலிருந்து தாஸ், மூன்று முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சமீபத்தில் அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கின்றது. 

இப்படியான சூழலில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் ஏற்பட்டுள்ளது. தொற்றிலிருந்து மீள அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு திரிணாமுல் காங்கிரஸின் தலைவரும் மேற்கு வங்கத்தின் முதல்வருமான மம்தா பானர்ஜி, இரங்கல் தெரிவித்துள்ளார். 

கடந்த ஜூன் மாதம், திரிணாமுல் காங்கிரஸின் எம்எல்ஏ-வாக இருந்த தாமோனஷ் கோஷ் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை மேற்கு வங்கத்தில் 1.16 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா பாதிப்பால் 2,428 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அம்மாநிலத்தில் 3,066 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த மாதத் தொடக்கத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, சிபிஎம் கட்சியின் மூத்த தலைவரான ஷியாமல் சக்ரோபர்த்தி கொரோனா தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

.