This Article is From Feb 10, 2019

காமராஜர் விரும்பிய ஆட்சியை தருவோம்: திருப்பூரில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பூர் வந்த பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்

காமராஜர் விரும்பிய ஆட்சியை தருவோம்: திருப்பூரில் பிரதமர் மோடி பேச்சு!

பாஜக அரசு காமராஜர் விரும்பிய ஆட்சியை தரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் வந்த பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். இதேபோல் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அவை, திருப்பூரில் 100 படுக்கை வசதியுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, புதிதாக கட்டமைக்கப்படும் திருச்சி விமான நிலையம், நவீன மயமாக்கப்படும் சென்னை விமான நிலையம் ஆகியவற்றுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து பிரதமர் மோடி காணொளி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

சென்னை கே.கே. நகரில் இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி, 470 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவக்கல்லூரி, எண்ணூரில் கடற்கரை துறைமுகம், சென்னை துறைமுகம் முதல் மணலி சுத்திகரிப்பு நிலையம் வரை கச்சா எண்ணெய் குழாய் பதிப்பு ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல் சென்னையில் வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே புதிய மெட்ரோ ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் தன் உரையை தொடங்கினார். திருப்பூர் மண்ணிற்கு தலை வணங்குகிறேன். ஏனென்றால் கொடிகாத்த திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை உள்ளிட்டோரின் துணிச்சலுக்கான மண் இது.

தொழில் முனைவோர், அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கின்ற மக்களை கொண்டிருக்கிறது திருப்பூர். தீரன் சின்னமலையின் துணிச்சல் உத்வேகம் அளிக்கிறது. பின்னலாடை தொழில் நடக்கும் திருப்பூர் நாட்டிற்கு உதாரணமாக திகழ்கிறது. நமோ என்ற வாசகம் தாங்கி வரும் டி-ஷர்ட் திருப்பூரில் இருந்து தான் வருகிறது. திருப்பூர் சிறு, குறு தொழில்கள், முறைசாரா தொழில்கள் அதிகம் இருக்கும் பகுதியாகும்.

கடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்களை செய்ததுள்ள காங்கிரஸ். இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் நாட்டில் பாதுகாப்பு பற்றி அக்கறை செலுத்தவில்லை. தொழிலாளர்கள் நலன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மாதம் ரூ.3000 பென்சனாக வழங்கப்படும். நாட்டின் பாதுகாப்புக்காக தற்போதைய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாட்டின் முன்னேற்றத்தை உலக நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இந்திய பாதுகாப்பை மேலும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை.இது போன்ற நல்ல ஆட்சியைத்தான் காமராஜர் விரும்பினார். காமராஜர் விரும்பிய ஊழலற்ற ஆட்சியை தருகிறோம் என்று அவர் கூறினார்.

.