Seeman News: சென்ற ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி, 4 சதவிகித வாக்குகள் வாங்கியதாகவும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இந்த விகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
செய்தியாளர்கள் மத்தியில் கட்சியின் வளர்ச்சி குறித்தான கேள்விக்கு சீமான், “நாங்கள் எத்தனை தொகுதிகளில் அல்லது இடங்களில் வெற்றி பெற்றோம் என்பதை வைத்துத் தேர்தல் முடிவுகளை அளவிடுவதில்லை. ஆனால், எத்தனை சதவிகித மக்களிடம் சென்று சேர்ந்துள்ளோம் என்பதைத்தான் பார்க்கிறோம். முதலில் பெரிதாக எந்த வாக்கு வங்கியும் இல்லாமல் இருந்தோம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு 4 சதவிகித வாக்குகளைப் பெற்றோம்.
தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் எங்களுக்குத்தான் கிடைத்திருக்கின்றன. இதுதான் வளர்ச்சி. 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்த வளர்ச்சி இன்னும் அதிகமாகும். அதில் பெரிய மாற்றம் வரும். நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள்,” என்று சவால் விடும் தொனியில் பதில் அளித்தார்.
“சீமான் நோட்டாவோடுதான் தேர்தலுக்குத் தேர்தல் போட்டியிடுகிறார் என்கிற விமர்சனம் பற்றி,” என ஒரு செய்தியாளர் கேட்க, “எங்களை அப்படிச் சொல்பவர்கள் தேர்தலில் தனித்து நின்றால், எனக்குக் கிடைக்கும் வாக்குகள் கூட அவர்களுக்குக் கிடைக்காது. நானாவது நோட்டோவோடு போட்டியிடுகிறேன். அவர்கள் அதோடும் போட்டியிட முடியாது,” என்று கிண்டலாக பதிலடி கொடுத்தார்.
வருகின்றன சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் கூட்டணி பற்றி விளக்கிய சீமான், “நாங்கள் கொள்கை, கோட்பாடுகளை சமரசம் செய்து யாரோடு சென்று கூட்டணி அமைக்க முடியும். தேசியக் கட்சிகள் மற்றும் திராவிடக் கட்சிகளோடு எங்களால் சேர்ந்து நிற்க முடியாது. ஆனால், எங்களை ஏற்கும் பிற கட்சிகளோடு வருங்காலத்தில் சேர்ந்து பணியாற்றுவோம்,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.