சிலைக்கடத்தல் அனைத்து வழக்கையும் சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரியிடம் முறையிட சென்றால், அங்கு விசாரணை அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுகுறித்து பொன்.மாணிக்கவேல் தரப்பிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டபோது, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டாளும் தனக்கான அலுவலகம் எதுவும் ஒதுக்கப்படவில்லை, கிண்டியில் வழக்கமாக செயல்படும் அலுவகத்திற்கு சென்றால், அங்கிருக்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபி தனக்கு அலுவலகம் இல்லை என்று கூறிவிட்டார். இதன் மூலம் நாங்கள் அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று குற்றச்சாட்டை வைத்தார்.
இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவை மீறுவதாக தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் இடைநீக்கம் செய்ய நேரிடும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வழக்கை வரும் ஜன.9ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.