ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பொது அமைதி சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
New Delhi: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பரூக் அப்துல்லா அதில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
பரூக் அப்துல்லா, முன்னாள் முதல்வரும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜம்மு காஷ்மீரில் ஆட்சிய நடத்தியவருமான மெகபூபா முப்தி, நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் புதிதாக உருவாக்கப்பட்ட காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். புதிதாக ஏற்படுத்தப்பட்ட மற்றொரு யூனியன் பிரதேசம் லடாக் ஆகும்.
சசி தரூருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது-
நீங்கள் கடந்த அக்டோபர் 21, 2019 -ல் எனக்கு அனுப்பிய கடிதத்தை இன்று நான் பெற்றுக் கொண்டேன். சிறையில் இருக்கும் எனக்கு சிறைத்துறை அதிகாரி அந்த கடிதத்தை வழங்கினார்.
இவ்வாறு தாமதமாக நான் கடிதம் பெறப்பட்டதை துரதிருஷ்டவசமாக உணர்கிறேன். இதுஒரு மூத்த நாடாளுமன்றவாதியை, அரசியல்கட்சியின் தலைவரை நடத்தும் முறையல்ல. நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் கிடையாது.
இவ்வாறு பரூக் அப்துல்லா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பதற்றத்தை குறைப்பதற்காக காஷ்மீரில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களை மத்திய அரசு சிறையில் வைத்துள்ளது. கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் எழுப்பியது. பரூக் அப்துல்லா நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பார் என்றால் அவர் காஷ்மீரில் நடந்தவற்றை கூறி விடுவார் என்பதற்காக அவரை மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது ட்விட்டர் பதிவில், 'சிறையில் உள்ள பரூக் அப்துல்லாவிடமிருந்து கடிதம் வந்துள்ளது. அவரை நடைபெறுகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வைப்பதற்கு உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கைது நடவடிக்கை என்பது எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுவிடும். ஜனநாயக மாண்பை காப்பதற்காக அவர் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். .
பொது அமைதியை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா சிறை வைக்கப்பட்டுள்ளார். விசாரணையின்றி ஒருவரை 2 ஆண்டுகளுக்கு சிறைவைக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர், 3 முறை முதல்வராக இருந்த பரூக் அப்துல்லாவுக்கும், அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் இப்படியொரு அனுபவம் ஏற்படுவது இதுவே முதன்முறை. வழக்கமாக தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், கல்வீசுவோர் மீதுதான் இந்த அடக்குமுறை கையாளப்படும். மரக்கட்டைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா கடந்த 1978-ல் இந்த சட்டத்தை கொண்டு வந்தார்.