மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும், சந்திரபாபு நாயுடுவும் இன்று சந்தித்து பேசினர்.
Kolkata: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதில் முக்கிய திருப்பமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. இதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று கூறினார்.
சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘‘நாங்கள் அனைவரும் மூத்த அரசியல்வாதிகள். பிரதமர் மோடியை விடவும் அரசியலில் நாங்கள் சீனியர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை ஒன்றிணைத்து மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி வரும் ஜனவரி 19-ம்தேதி பேரணி நடத்தவுள்ளார். இதில் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்.
மக்களவை தேர்தல் கூட்டணி அமைப்பதில் காங்கிரசுக்கு உறுதுணையாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருந்து வருகிறார்.அவர் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கூட்டணி தொடர்பான முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று வருகிறார்.