This Article is From Aug 12, 2019

ரஜினியிடமிருந்து மத்திய அரசிற்கு எதிரானக் கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது: திருமாவளவன்

மகாபாரதத்திலிருந்து மோடி - அமித் ஷாவுக்கு உவமையாகச் சொல்லப்பட்ட கருத்தில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

ரஜினியிடமிருந்து மத்திய அரசிற்கு எதிரானக் கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது: திருமாவளவன்

ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் வரும் என எதிர்ப்பார்க்க முடியாது.

ரஜினியிடமிருந்து மத்திய அரசிற்கு எதிரானக் கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது. 

இந்த புத்தகம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர். 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட என்னை நினைவு வைத்திருப்பவர். அவர் சிறந்த ஆன்மிகவாதி. அவர் தப்பித்தவறி அரசியலுக்கு வந்துவிட்டார்.

காஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவிற்கு வாழ்த்துக்கள். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது. நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள்; இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார். 

இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை மிகவும் பாராட்டி ரஜினிகாந்த் பேசியதால், அவருடைய பேச்சு அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறும்போது, 

ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் வரும் என எதிர்ப்பார்க்க முடியாது. அவர், மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துக்களைத்தான் கூறுகிறார். எனவே, மகாபாரதத்திலிருந்து மோடி - அமித் ஷாவுக்கு உவமையாகச் சொல்லப்பட்ட கருத்தில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இது அதிர்ச்சி அடையக் கூடியதும் இல்லை என்று அவர் கூறினார். 

.