ஸ்டெர்லைட் காப்பர் ஆலை விவகாரத்தில் முக்கியத் திருப்பமாக ஆலையை திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்திருந்தது. அந்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதாக கூறி தொடர் போராட்டங்கள் நடந்தன. இதில் கடந்த மே மாதத்தின்போது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக அரசாணை பிறப்பித்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தை ஸ்டெர்லைட் நிர்வாகம் நாடியது. இதில் ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து ஆலையை திறக்க அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்காமல் தடுக்க அரசு சட்டப்போராட்டம் நடத்தும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதி அல்ல என்று தெரிவித்துள்ளார்.