கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் சந்திப்பது அரசியல் செய்வதற்கு அல்ல. ஆறுதலும், உதவிகளும் வழங்க மட்டுமே என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது,
அமமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்.ஜி.ஓக்கள் போல செயல்பட்டு வருகிறார்கள். அமமுக சார்பில், நிவாரண பொருட்கள் முகாம்களுக்கும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும், தொடர்ந்து அனுப்பப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. தனியார் தொண்டு நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருவதை வரவேற்கிறேன். இந்த பணியில் அவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை.
சோழநாடு சோறுடைத்து என்று சொல்வார்கள். ஆனால் செல்லும் இடங்களிளெல்லாம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அநாதைகள் போலவும், அகதிகள் போலவும் உணவுக்காக வீதிகளில் நிற்பது வேதனையாக உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்க்கும்போது, மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
காவல்துறை பாதுகாப்போடு பிரதான சாலைகளில் செல்லும் அமைச்சர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மட்டுமே சந்தித்து திரும்புகிறார்களே தவிர, நகர கிராமப்புற பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மற்ற மக்களை சந்திப்பதில்லை என போகுமிடமெல்லாம் மக்கள் கூறுகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளதாக கூறுகின்றனர். ஆகவே சில நாட்களுக்கு மட்டுமே நிவாரணம் அளிப்பதைவிட மத்திய மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி, அம்மக்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக மீட்டெடுக்க வேண்டும்.
அமைச்சர்களும், ஆளுங்கட்சி சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களால் ஆங்காங்கே வழிமறிக்கப்படுகிறார்கள். அதிமுக கொடியை தங்களது வாகனங்களில் கட்டிச்செல்லவே தயங்குகிறார்கள். கடந்த ஒன்றரை வருடமாக மக்கள் விரோத செயல்களில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டதால் தான் இந்த நிலை
அமைச்சர்கள் ஆங்காங்கே ஆய்வு கூட்டங்கள் நடத்தி அதிகாரிகளை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லவிடாமல் தடுப்பதை தவிர்த்து அதிகாரிகளை சுதந்திரமாக கிராமங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
இதற்கு முன் புயல் பாதிப்புகள் ஏற்பட்ட போதெல்லாம் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகைக்கு யானைப்பசிக்கு சோளப்பொறியை தந்ததைப் போல் மத்திய அரசு நிவாரணம் கொடுத்துள்ளது. இம்முறையாவது அவ்வாறு இல்லாமல் இடைக்கால நிவாரண நிதியாக குறைந்தபட்சம் 5000 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.