New Delhi: அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதன் மூலம் பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம்.
பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிரான ஒரு தீர்க்கமான போராட்டத்திற்கு நேரம் வந்துவிட்டது என்று பாகிஸ்தானுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கை விடுத்தார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், அமெரிக்கா இந்தியாவின் பக்கம் துணை நிற்கிறது என்று கூறினார்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, தனது 100 நாள் ஆட்சியின் சாதனையில் ஜம்மு-காஷ்மீர் நகர்வை முக்கியாமான ஒன்றாக சுட்டிக்காட்டினார். புதுடெல்லி மற்றும் இஸ்லாமாபாத் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு அதிபர் டிரம்ப் இரண்டு முறை மத்தியஸ்தம் செய்ய முன்வந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் அமெரிக்காவில் அதிர்வுகளைக் கொண்டிருந்தது.
முன்னதாக, அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹவுடி மோடி எனும் பிரமாண்ட நிகழ்ச்சி ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி அரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு உண்மையான நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் ட்ரம்ப் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என்றார்.
உலக அரசியலில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தையிலும் ட்ரம்ப் பெயர் இடம்பெறுகிறது என்ற மோடி, ஒரு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என்ற நிலையிலிருந்து அமெரிக்க அதிபராக ட்ரம்ப் உயர்ந்துள்ளதை பாராட்டினார்.
தொடர்ந்து, ஒட்டுமொத்த இந்தியாவும், அதிபர் ட்ரம்புடன் நன்கு தொடர்பு கொண்டுவிட்டது. அடுத்த ஆண்டு அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ளதால், அவர் வேட்பாளராக மீண்டும் நிற்கிறார். எனவே, அவரை மீண்டும் அதிபராக தேர்வு செய்ய வேண்டும் என்றார்.
அமெரிக்காவில் 9/11 தாக்குதல், மும்பையில் 26/11 தாக்குதல் நடத்தியவர்களை தற்போது எங்கே தேடுவது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளை உருவாக்குபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று அவர் கூறினார்.