This Article is From Oct 19, 2018

‘கோயிலை மூட மாட்டோம், பெண்கள் வரக் கூடாது!’- சபரிமலை கோயில் தலைமை அர்ச்சகர்

ஐயப்பன் கோயில் இருக்கும் இடத்தில் கலவர சூழல் நிலவுவது வருத்தம் அளிக்கிறது, தலைமை அர்ச்சகர் கண்டாரு ராஜீவாரு

‘கோயிலை மூட மாட்டோம், பெண்கள் வரக் கூடாது!’- சபரிமலை கோயில் தலைமை அர்ச்சகர்

இந்த இடத்தை யாரும் போர் சூழல் போல மாற்றி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம், தலைமை அர்ச்சகர்

Sabarimala, Kerala:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதால், கோயிலை மூட வாய்ப்புள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இன்று அது குறித்து பேசியுள்ள கோயிலின் தலைமை அர்ச்சகர் கண்டாரு ராஜீவாரு, ‘கோயிலை மூடும் எண்ணம் இல்லை, ஆனால் பெண்கள் வரக் கூடாது' என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் எப்போதும் கோயிலை மூடி விடுவோம் என்றெல்லாம் சொல்லியதே இல்லை. மாதாந்திர பூஜையை ஐயப்பனுக்கு செய்வது எங்கள் கடமை. அதிலிருந்து நாங்கள் விலக மாட்டோம். அந்த பாரம்பரியத்தை நாங்கள் உடைக்க மாட்டோம்.

நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கின்றோம். அதே நேரத்தில் ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கைகளையும், கோயிலின் வழக்கத்தையும் மதித்துப் 10 முதல் 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் வர வேண்டாம் என்பதையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஐயப்பன் கோயில் இருக்கும் இடத்தில் கலவர சூழல் நிலவுவது வருத்தம் அளிக்கிறது. இந்த இடத்தை யாரும் போர் சூழல் போல மாற்றி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.

செப்டம்பர் 28 ஆம் தேதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 10 முதல் 50 வயதுக்கு இடையில் இருக்கும் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நுழையக் கூடாது என்றிருந்த நடைமுறைக்கு முடிவுகட்டித் தீர்ப்பளித்தது.

.