This Article is From Aug 08, 2018

உணர்ச்சிகரமான இறுதி நிமிடங்கள் - கதறி அழுத தொண்டர்கள்

தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதனர்

உணர்ச்சிகரமான இறுதி நிமிடங்கள் - கதறி அழுத தொண்டர்கள்
Chennai:

ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீர் வெள்ளத்துக்கு நடுவே கலைஞர் கருணாநிதியின் இறுதி பயணம் நடந்தேறியது. 6 தசாப்தங்களாக மக்களுக்காக உழைத்த தங்கள் ஆதர்ச தலைவனுக்கு இறுதியாக மரியாதையை செலுத்த அலைகடலென திரண்டு வந்திருந்தனர். ராஜாஜி அரங்கில் ஒரு கட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிறிது நெரிசலும் ஏற்பட்டது. ஒரு சிலர் காயம் அடைந்தனர்.

கூடியிருந்த அவர்கள் ஒவ்வொருவரும் கலைஞரை தங்கள் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ள ஒரு கதையை வைத்திருக்கின்றனர். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் அவரால் பயன்பெற்றவர்களாக இருந்தனர்.

தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதனர். “ நான் என் தாத்தாவை இழந்து விட்டேன்” என்றார் ஒருவர். “ நான் இன்று ஐ.டி துறையில் பணியாற்றுகிறேன், என்றால் அதற்கு அவர் தான் காரணம்” என்றார் மற்றொரு இளைஞர். தமிழகத்தின் ஆளுமை மிகுந்த பெருந்தலைவர்களுள் கடைசியாக இருந்த தலைவரை வழியனுப்பு சிலர் தங்கள் குழந்தைகளுடன் மரியாதை செலுத்த வந்திருந்தனர். அடுத்த தலைமுறைக்கும் அவர் கட்டிக் காத்து வந்த சமூக நீதியை கற்பிக்க, அவர்கள் பிள்ளைகளுடன் வந்திருக்கலாம்.

அண்ணாவிடம் இரவல் பெற்ற இதயத்துடன், அவர் அருகிலேயே ஓய்வெடுக்கச் செல்கிறார் அந்த அருமைத் தம்பி. அவரது கடைசி ஆசை, மெரினாவில் காத்துக் கொண்டிருக்கிறது. “ ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று தான் விரும்பிய வாசகம் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில் துயில் கொள்ள இருக்கிறார்.

.