This Article is From Jun 27, 2018

பணியிடமாற்றம் பெற்ற ‘பகவான்’… அன்பால் போராடி நிறுத்திய மாணவர்கள்!

பணியிடமாற்றம் பெற்ற ஆங்கில ஆசிரியர் மீண்டும் அதே பள்ளியில் தன் பணியைத் தொடர்ந்து வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியகரம் அரசுப் பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 

ஹைலைட்ஸ்

  • ஆசிரியர் பகவான் ஆங்கிலப் பாடம் எடுத்து வருகிறார்
  • பகவானின் பணியிட மாற்றத்தை மாணவர்கள் ஏற்க மறுத்தனர்
  • இதனால், அரசு பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்தது
Tiruvallur, Tamil Nadu:

பணியிடமாற்றம் பெற்ற ஆங்கில ஆசிரியர் மீண்டும் அதே பள்ளியில் தன் பணியைத் தொடர்ந்து வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியகரம் அரசுப் பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 

பணியிட மாற்றம் பெற்ற ஆசிரியரை அப்பள்ளியிலிருந்து வெளியேவிடாமல் மாணவ, மாணவிகள் நடத்தியப் பாசப் போராட்டத்தால் அவரது பணியிட மாற்ற உத்தரவே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பகவானை, கட்டித் தழுவி மாணவர்கள் தடுத்து நிறுத்திய வீடியோ காட்சிகள் இந்திய அளவில் வைரலானது.

இதுகுறித்து அப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி சங்கவி கூறுகையில், “இதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை. பகவான் சார் எந்த ஒரு பாடத்தையும் சூப்பராக நடத்திவிடுவார். நிறைய கதைகள் சொல்லி எங்களுடன் பேசுவார். புரொஜெக்டர் மூலம் எங்களுக்கு நிறைய கற்றுத்தருவார்”.

மேலும், “பகவான் சாரை எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அவரால் தான் பத்தாம் வகுப்பில் எல்லாரும் நிறைய மதிப்பெண்கள் பெறுவார்கள். எல்லா ஆசிரியர்களும் நல்லா பாடம் எடுப்பாங்க. ஆனால், பகவான் சார் இன்னும் நல்லா எடுப்பார்” என்றார்.

கூலித் தொழிலாளியின் மகளான ஏழாம் வகுப்பு மோனிகா கூறுகையில், “பகவான் சார் பாடம் நடத்தும் போது ரொம்ப ஆர்வமா இருக்கும். எனக்கு கலெக்டராக வர ஆசை. வீட்டில் கூட பகவான் சார் இல்லைன்னா ஸ்கூலுக்கே எங்களை அனுப்பமாட்டாங்க” என்றார்.

பகவான் சார் அந்த அரசுப் பள்ளியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகள் எடுத்து வருகிறார். அவர் கூறுகையில், “மாணவர்களுக்கு நிகராக நின்று அவர்களுடன் ஒரு நண்பனாகவே இணைந்து பழகுவேன். பள்ளி முடிந்த பின்னரும் என்னை அழைக்கலாம். எப்போது வேண்டுமானாலும் சொல்லித் தருவேன். இதுதான் இந்த அன்புக்குக் காரணம். ஆனால், அரசாங்கத்தின் பணியிட மாறுதல் வந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கடமை” என்றார்.
 

.