Jharkhand Election- “ஜார்கண்ட் மாநிலத்தை 5 ஆண்டுகள் ஆட்சி புரிய வாய்ப்பளித்த மக்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்"
New Delhi: Jharkhand Election - ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா முதன்முறையாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்வதாக அமித்ஷா கூறியுள்ளார்.
அவர் மேலும், “ஜார்கண்ட் மாநிலத்தை 5 ஆண்டுகள் ஆட்சி புரிய வாய்ப்பளித்த மக்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஜார்கண்டின் வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து பாடுபடும்,” என்று உறுதியளித்துள்ளார்.
ஜார்கண்ட் தேர்தலில் காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைமையிலான கூட்டணி, மொத்தம் உள்ள 81 இடங்களில் 46 இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியில் இருந்த பாஜக வெறும், 26 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனத் தெரிகிறது.
2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக, அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் சங்கத்துடன் கூட்டணி அமைத்து 42 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அரியணையில் ஏறியது. காங்கிரஸ் அந்த தேர்தலில் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றது.
பாஜக சார்பில் மாநில முதல்வராக இருந்த ரகுபர் தாஸும், தான் போட்டியிட்ட ஜம்ஷெத்பூர் கிழக்குத் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு முதல் அந்தத் தொகுதியில் அவர் மட்டுமே வெற்றி பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.