"மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம்"
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இதுவரை 18 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
- இந்திய அளவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராட பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க் கிழமை நள்ளிரவு முதல் 21 நாட்கள் வரை இந்தியா மொத்தத்திற்கும் ஊரடங்கு உத்தரவு போடப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, இன்று முதல் மொத்த நாட்டிலும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முழு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
திருமா, தனது அறிக்கையில், “இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள், “கையெடுத்துக் கும்பிடுகிறேன்; ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலேயே இருங்கள்; வீட்டை விட்டு வெளியே வந்தால் உங்கள் வீட்டுக்குள் கொரோனா அடியெடுத்து வைக்கும்” என்று மிகுந்த உருக்கத்தோடு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதனை நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்!
நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்கும் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கும் இதை விட்டால் வேறு வழியில்லை என்பதுதான் இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்கு அடிப்படையான காரணம்.
ஏராளமான பொருளாதார சிக்கல்களை, வேறுபல நெருக்கடிகளைச் சந்திக்க நேரலாம். ஆனால், வேறு வழியில்லை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம். நாட்டு நலன்களுக்காக; நமது நலன்களுக்காக; நம்முடைய குடும்பத்தினரின் நலன்களுக்காக… எனவே, இந்த வேண்டுகோளை அனைவருக்கும் நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக விடுக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.