சென்னை, தியாகராய நகரில் இருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை இன்று பல்வேறு மூத்த தயாரிப்பாளர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள், தற்போது பதவியில் இருக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்து, பல்வேறு புகார்களை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் மூத்த தயாரிப்பாளர் அழகப்பன், ‘சென்ற வாரம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதில், யார் எப்போது வேண்டுமானாலும் திரைப்படங்களை வெளியிடலாம் என்கிறார். 4 திரைப்படங்கள் தான் ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என்கின்ற தீர்மானம் இருக்கிறது. அந்தத் தீர்மானத்தை மதிக்காமல் தற்போது அறிக்கை வெளியிடுகிறார்.
இப்படி செய்தால் சிறிய படத் தயாரிப்பாளர்கள் என்ன ஆவார்கள். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்கிறார் விஷால். தலைவர் ஒரு விஷயத்தை இப்படி அணுகலாமா. அப்படி அணுகுபவர் தலைவரா. விஷால் தலைவராக இருக்கவே லாயக்கற்றவர்.
நான் தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் இருந்த போது, 7.80 கோடி ரூபாய் இருப்பில் வைத்துவிட்டுச் சென்றோம். தற்போது அது குறித்து கணக்குக் கேட்டால், யாரும் பதில் தர மறுக்கிறார்கள். அந்தப் பணம் என்னவானது? இது குறித்து நாங்கள் செய்தித் துறை அமைச்சரையும் முதல்வரையும் சந்தித்துப் புகார் அளிக்க உள்ளோம்.
தமிழ் ராக்கர்ஸைப் பிடிப்பேன் என்றார். தற்போது, அவர்தான் தமிழ் ராக்கர்ஸின் பார்ட்னர் என்று தகவல்கள் வருகின்றன' என்று கொதித்தார்.
அடுத்தக்கட்டமாக, விஷால் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். அதைத் தொடர்ந்து, அவர் படப்பிடிப்பு நடத்தும் இடத்திற்கே சென்று போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.