This Article is From Jun 26, 2020

காவல்துறையினரின் வீடுகளுக்கு இனி பால் விநியோகிக்க மாட்டோம்: பால் முகவர்கள் சங்கம் அதிரடி!

நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் வீடுகளுக்கு இனி பால் விநியோகிக்க மாட்டோம்: பால் முகவர்கள் சங்கம் அதிரடி!

காவல்துறையினரின் வீடுகளுக்கு இனி பால் விநியோகிக்க மாட்டோம்: பால் முகவர்கள் சங்கம் அதிரடி!

ஹைலைட்ஸ்

  • காவல்துறையினரின் வீடுகளுக்கு இனி பால் விநியோகிக்க மாட்டோம்
  • பால் முகவர்கள் சங்கம் அதிரடி முடிவு
  • நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்குப் பால் விநியோகம் கிடையாது

தமிழகம் முழுவதும் காவல்துறையினரின் வீடுகளுக்கு இனி பால் விநியோகிக்க மாட்டோம் என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் சார்பில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத கடைசி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன், ஜூன்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதனிடையே, மதுரையிலும் தொற்று பரவல் அதிகமாக காணப்பட்டதால் அங்கும் சென்னையை போல், 24 வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறும் வியாபாரிகள், பொதுமக்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

ஊரடங்கு நேரத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வைப்பதும் என காவல்துறை நடவடிக்கைகள் நீண்டு கொண்டே சென்றது. 

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். 

இதைத்தொடர்ந்து, சிறையில் வைத்து போலீசார் தாக்கியதே அவர்கள் இருவர் உயிரிழப்புக்கும் காரணம் என்றும் இருவரையும் அடித்துக் கொன்ற போலீசார் மீது இரட்டைக் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வியாபாரிகள் நேற்று உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, நீதித்துறை மேல் நம்பிக்கை வைத்து உடலை வாங்குவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா பேரிடர் காலமனா தற்போது மக்களுக்கு பால் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். 

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என அறிவித்துள்ள நிலையில் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களைப் பால் விநியோகம் செய்ய விடாமல் வாகனங்களைப் பறிமுதல் செய்வது, பால் விநியோக மையங்களை, பால் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது என பல இடையூறுகளைக் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

இது குறித்து தமிழக முதல்வர், பால்வளத்துறை அமைச்சர், காவல்துறை தலைவர், ஆணையாளர் ஆகியோரது கவனத்திற்குக் கொண்டு சென்றும் இது வரை எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் இருக்கிறது. எனவே நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பால் விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்குக் காவல்துறையினரால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை கடைநிலை காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை எவரது வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்யப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்“ என்று கூறியுள்ளனர்.

.