This Article is From Jun 10, 2019

’ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்துவது தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி அரசு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது. 116 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது, எந்தெந்த இடங்கள் என்ற விளக்கமான விவரங்கள் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது, இனி தான் எங்களுக்கு விளக்கமாக தகவல் வரும் என தெரிவித்துள்ளனர். வருகிற தகவலின் படி, புதுச்சேரியில் மட்டும் 116 இடங்களில் கடல் பகுதிகளிலும், நில பகுதிகளிலும், ஹைட்ரோ கார்பன் அகழ்வாராய்ச்சிக்காக மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Advertisement

இதனை நாங்கள் முழுமையாக எதிர்ப்போம், இந்த மனித சங்கலி போராட்டத்திற்கு பிறகு மக்களோடு ஒருங்கிணைந்து பல கட்ட நடவடிக்கைகளை எடுப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில், மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

Advertisement

வருகிற 12-ந் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெறுகிறது.

மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணியாக அமையும் வகையில் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வைகோ, இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

Advertisement