தஞ்சையில் இன்று நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது,
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இதுவரை வந்து பார்வையிடவில்லை. ஆறுதலுக்காக ஒரு அறிக்கை கூட விடவில்லை. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் கடுமையாக எதிர்ப்போம்.
தமிழக மக்களை பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார். தமிழ் மக்கள் நலனை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. வரும் 27-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக மதிமுக சார்பில் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும். இதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, மத்திய அரசு மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக அவர் சமீபத்தில் ராணுவ நிகழ்ச்சிக்காக தமிழகம் வந்தபோது கூட "#கோபேக்மோடி" (#GO BACK MODI) ஹேஷ் டேக்குகள் உலகம் முழுவதும் பிரபலமானது.
பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அவரது வருகையை எதிர்த்து தமிழகம் முழுவதும் கறுப்பு கொடிகள் காட்டப்பட்டது. சென்னையில் ராட்சஷ கறுப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டது. பலத்த எதிர்ப்புகள் காரணமாக அவர் தரை வழி பயணம் மேற்கொள்ளாமல் ஹெலிகாப்டரில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.