பகலில் வெயில் கொளுத்தினாலும் மாலையில் மேகமூட்டம் காணப்படும்
ஹைலைட்ஸ்
- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது
- 13 மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்
- நீர் இருப்பு குறைந்ததால் சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.
சென்னை உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில் வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடும் வெயில் வீசத் தொடங்கியுள்ளது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏப்ரல் மாதத்தில் வெயில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் மாதத்தில் தொடக்கத்திலேயே வெயில் வாட்டி எடுக்கத் தொடங்கி விட்டது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் இடங்களில் நீர் இருப்பு குறைந்து வருவதால், சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், தற்போதைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
சென்னையில் பகல்நேரத்தில் வெப்பம் அதிகமாக காணப்பட்டாலும் மாலையில் வெப்பம் குறைந்து மேகமூட்டத்துடன் வானிலை காணப்படும்.
இன்றும் நாளையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், மதுரை, ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், வேலூர், தர்மபுரி ஆகிய 13 மாவட்டங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.
இந்த மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். நாளை முதல் 10-ம்தேதி வரையில் தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களை பொறுத்தவரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.