This Article is From Aug 09, 2019

மேற்கு தமிழகத்தில் தொடரும் கனமழை- அடுத்த 24 மணி நேரத்தின் வானிலை நிலவரம்!

அடுத்து வரும் 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் பலத்த காற்றானது 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்

மேற்கு தமிழகத்தில் தொடரும் கனமழை- அடுத்த 24 மணி நேரத்தின் வானிலை நிலவரம்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் 24 முதல் 48 மணி நேரத்துக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார். 

பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்கள் மத்தியில் இது குறித்து பேசுகையில், “தென் மேற்கு பருவ மழை கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாக உள்ளது. ஈரப்பதத்துடன் தென் மேற்கு பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மோதி வீசக்கூடிய நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக, அடுத்த வரும் 24 மணி நேரத்திற்கு மலைப் பகுதிகள் உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி ஆகிய இடங்களிம் மிக கனமழை தொடரும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 91 சென்டீ மீட்டர் மழை பெய்துள்ளது. 

அடுத்து வரும் 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் பலத்த காற்றானது 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். எனவே மீனவர்கள் அடுத்து 2 தினங்களுக்கு கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளார். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பொழிவு இருந்த இடங்கள்:

அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 91 சென்டீ மீட்டர்

மேல் பவானி - 45 சென்டீ மீட்டர்

எமரால்டு - 36 சென்டீ மீட்டர்

சோளையார் - 28 சென்டீ மீட்டர்

ஆழியார் - 17 சென்டீ மீட்டர்

சின்னக் கள்ளார் - 37 சென்டீ மீட்டர்

வால்பாறை- 26 சென்டீ மீட்டர்


 

.