வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி (Fani) புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் புரி பகுதியில் நாளை மாலை கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக ஒடிசா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவசர நிலை ஏற்படும் பட்சத்தில், மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் மேற்கொள்ள கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக ஒடிசாவில் 11 மாவட்டங்களில், தேர்தல் விதமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், வானிலை மையத்தால் ஒடிசா மாநிலத்திற்கு நேற்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒடிசா அரசு இன்று முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும், 11 கடோலார மாவட்டங்களில் உள்ள 8 லட்சம் மக்கள் வரை பாதுகாப்பான இடங்களுக்கு பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், ஃபனி புயலானது தற்போது விசாகப்பட்டினத்திற்கு சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது நாளை மாலை ஒடிசாவின் பூரி பகுதியில் கரையை கடக்கிறது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகப்பட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.