ஹைலைட்ஸ்
- இருதய ஆரோக்கியத்திற்கு ரைஸ் பிரான் எண்ணெய் சிறந்தது.
- கிரேவி மற்றும் கறி தயாரிக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
- உடல் எடை குறைக்க ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.
உங்கள் சமையல் எண்ணெயின் தன்மை மற்றும் தரத்தை பொருத்துதான் உணவின் சுவையும் அமையும். சமைப்பதற்கு நம்மில் பலரும் பலவிதமான எண்ணெய்களை பயன்படுத்தி வருகிறோம். ஆலிவ் எண்ணெய், ரைஸ் பிரான் ஆயில், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் போன்றவை சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. வருடக்கணக்கில் தொடர்ச்சியாக ஒரே எண்ணெயை பயன்படுத்தாமல் மாதம் ஒரு எண்ணெயை மாற்றினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் கிடைத்து விடுவதாகவும், கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் குக்கிங் ஆயில் எதுவென தெரிந்து கொள்வோம்.
ஆலிவ் எண்ணெய்:
உடல் எடை குறைக்க தற்போது பலரும் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி வருகின்றனர். ஆலிவ் எண்ணெயில் பாலிஃபினால் இருப்பதால் புற்றுநோய் மற்றும் இருதய நோய்களின் அபாயம் தடுக்கப்படுகிறது. எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெயை சாலட், டிப்ஸ், சூப் அல்லது பிரட் தயாரிக்க பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் இருக்கிறது. இதில் இருக்கக்கூடிய கொழுப்பு மூலக்கூறுகள் வயிற்றில் இருந்து கல்லீரலுக்கு செல்வதால் உடனடியாக உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. தேங்காய் எண்ணெயில் சமைப்பதால் செரிமானம் சீராக இருக்கும். உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும். சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
வெஜிடபிள் ஆயில்:
சோயாபீன், கார்ன், பீனட், கனோலா, சன்ஃப்ளவர் மற்றும் சஃப்ளவர் போன்ற எண்ணெய்களை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த வெஜிடபிள் ஆயிலை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்த எண்ணினால் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். பல காய்கறிகள் ஹட்ரோஜெனேட் செய்யப்படுவதால் இருதய நோய்கள் ஏற்படலாம்.
கடலை எண்ணெய்:
கடலை எண்ணெயில் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் சமைப்பதற்கு சிறந்த எண்ணெய். கடலை ஒவ்வாமை இருப்பவர்கள் இதனை தவிர்க்கலாம். கடலை எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் கலந்து பயன்படுத்துவதால் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் கிடைக்கிறது.
ரைஸ் பிரான் ஆயில்:
ரைஸ் பிரான் எண்ணெயில் ஒரேசனால் இருப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. இதில் மோனோஅன்சாட்சுரேடட் ஃபேட்டி அமிலம் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
நல்லெண்ணெய்:
நல்லெண்ணெயில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்புகள் இருப்பதால் உணவில் அதிகளவு நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளலாம். சமையல் செய்வதற்கு உகந்த எண்ணெயில் இதுவும் ஒன்று. உடல் உபாதைகளை போக்கும் தன்மை கொண்ட இந்த எண்ணெயை பயன்படுத்துவதால் நோயின்றி வாழலாம்.