This Article is From Jan 05, 2019

‘கில்கிறிஸ்ட் பாதி… தோனி மீதி…’- வெல்கம் ஹோம் ரிஷப் பன்ட்! #RishabhPant

பன்டோட கீப்பிங் போகப் போக முன்னேறிடும். அதலையும் அவரு கலக்குவாரு” என்று பன்டின் முன்னோடி கில்கிறிஸ்டே சான்றிதழ் கொடுக்கிறார்

‘கில்கிறிஸ்ட் பாதி… தோனி மீதி…’- வெல்கம் ஹோம் ரிஷப் பன்ட்! #RishabhPant

மிகவும் பலம் பொருந்திய அனுபவம் வாய்ந்த அணியில் இளம் விக்கெட் கீப்பராக அந்த இளைஞன் அறிமுகமானான். தனது அசாத்திய கீப்பிங் திறமையாலும், ஆக்ரோஷ பேட்டிங் யுக்தியாலும் வெகு விரைவில் அந்த அணியின் ரெகுலர் கீப்பரானான். அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினாலும், டெய்ல் எண்டர்ஸை வைத்து போட்டியை முடித்துக் காட்டினான். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்று இன்றுவரை புகழப்படும் ஆடம் கில்கிறிஸ்ட் செய்த சாதனைகள் இவை.

ufo6vqj

ஆடம் கில்கிறிஸ்ட் எப்படி ஆரம்பித்தாரோ, அதேபோல இன்று தனது கணக்கை ஆரம்பித்துள்ளார் ரிஷப் பன்ட். கில்கிறிஸ்ட் எதற்காக புகழப்பட்டாரோ, அதே கெத்தோடு வலம் வருகிறார் பன்ட். கீப்பிங்கில் சுறுசுறுப்பு, உடல் மொழியில் குரும்பு, எதிரணி என்ன கொடுத்தாலும் அதை வட்டியும் முதலுமாய் திரும்ப கொடுக்கும் அணுகுமுறை, அதிரடி பேட்டிங், எதையும் பொருட்படுத்தாத ஷாட் செலக்‌ஷன் என நுனி முதல் அடி வரை உர்ச்சாகப்படுத்துகிறார் பன்ட்.

‘இந்திய அணியில் தோனிக்கு அடுத்து யார்..?' என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கேட்கப்பட்ட கேள்விக்கு தினேஷ் கார்த்திக், ரிட்டிமன் சாஹா, பார்த்திவ் படேல் போன்றவர்கள் பதில் சொல்ல எல்லா விதத்திலும் முயன்றனர். இவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்… என்று சொல்லி இந்திய அணியில் தனது இடத்தை ஸ்திரப்படுத்தியுள்ளார் பன்ட்.

ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணி சார்பில் பன்ட், அதிரடி ஆட்டத்தைக் கையாண்டபோதுதான், முதன்முறையாக கிரிக்கெட் அரங்கில் அவர் கவனிக்கப்பட்டார். கடந்த ஐபிஎல் சீசனில், பல போட்டிகளில் டெல்லிக்கு தனி ஒருவனாக வெற்றிகளைத் தேடித் தந்த பின்னர் பிசிசிஐ-யின் கிரிக்கெட் தேர்வாளர்களின் கவனத்தை பன்ட் ஈர்த்தார்.

1vk0ugvo

2017 ஆம் ஆண்டிலேயே இந்திய டி20 அணியில் இடம் பெற்றார் பன்ட். அதில் பெரிதாக சோபிக்காத நிலையில் சென்ற ஆண்டு பிற்பகுதி வரை தனது ‘கம்-பேக்' வாய்ப்புக்காக காத்துக் கிடந்தார். நேரடியாக டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதுவரை 9 டெஸ்ட்களில் மட்டுமே விளையாடியுள்ள பன்ட், இரண்டு பிரமாதமான சதங்களை விளாசி, ‘வெறும் கீப்பர் அல்ல' என்பதை ப்ரூவ் செய்துள்ளார்.

கீப்பிங், பேட்டிஙைத் தவிர பன்ட், ஆஸ்திரேலிய மைதானங்களில் செய்யும் சில கோணல் மாணல் ஸ்டெர்ட்சுகளும் வர்ணனையாளர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. அது குறித்து விசாரித்ததில், ‘இள வயதில் பன்ட் ஜிம்னாஸ்டிக் பயின்றுள்ளார்' என்று தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்துதான் பன்டின் ‘துறுதுறுப்பு சீக்ரெட்' பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களுக்குத் தெரிந்துள்ளது. இந்தக் காரணத்தினாலும் ஆஸ்திரேலியாவில் பன்ட், வைரலாகியுள்ளார்.

“அவருக்கு அதீத எனர்ஜி இருக்கு. டெல்லி அணியில் அவர் கூட வேலை பார்க்கும்போதே அதை நிறைய உணர்ந்திருக்கிறேன். எப்போதும் எல்லோருடணும் சில்மிஷம் செய்து கொண்டே இருப்பார். ஆனால், போட்டி என்று வந்துவிட்டால் அதில மொத்த கவனம் இருக்கும். பந்தை க்ளீனா அடிப்பார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார் ரிக்கி பாண்டிங். ஆம், பன்ட் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடித்த சதம் கூட, தன் இடத்தை உறுதி செய்து கொள்வதற்காக என்பதைவிட, அணிக்குத் தேவைப்பட்டது என்பதற்காகத்தான். சதம் குறித்து எந்த வித பிரக்ஞையும் இல்லாமல் அவர் விளையாடியது அதைச் சுட்டிக் காண்பித்தது.

c2uprej8

“பன்டால் நிறைய சாதிக்க முடியும். அவர் விளையாட்றத பார்க்கிறப்ப ஒரு துள்ளல் இருக்கு. அசால்டாக பந்துகளை அவர் அடிக்கிற விதம் சூப்பரா இருக்கு. இந்த ஆக்ரோஷத்தோட, அவர் மட்டை போட்டு ஆடுறதையும் கத்துக்கணும். சீக்கிரமே அதை செய்வார். நல்ல ஃபிட்டா இருக்கிறதால, பன்டோட கீப்பிங் போகப் போக முன்னேறிடும். அதலையும் அவரு கலக்குவாரு” என்று பன்டின் முன்னோடி கில்கிறிஸ்டே சான்றிதழ் கொடுக்கிறார். தோனி, வரும் உலகக் கோப்பையோடு ஓய்வு பெற்றுவிட்டால், அடுத்த வாய்ப்பு யாருக்கு என்பதில் இருந்த டவுட்டு க்ளியர் ஹே…

.