பாகிஸ்தானின் விளம்பரத் தூதுவராக பாஜக உள்ளது என்று மம்தா விமர்சித்துள்ளார்.
Kolkata: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் மேற்கு வங்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, குடியுரிமை சட்ட திருத்த போராட்டங்களை முன்னின்று நடத்திய இந்து சகோதரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான இடதுசாரிகள் ஆளும் கேரளா, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானம் குறித்த மம்தா பானர்ஜி கூறியதாவது-
மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை அனுமதிக்க மாட்டோம். எங்களது போராட்டம் அமைதியான முறையில் இருக்கும். குடியுரிமை சட்டதிருத்தப்படி வெளிநாட்டவரை இந்திய குடிமக்களாக மாற்றிக் கொள்ளலாம். இதுமோசமான விளையாட்டு. நம்மை அழிவுக்கு கொண்டு செல்லும் வழி இது. இந்த சூழ்ச்சியில் யாரும் சிக்க வேண்டாம்.
சந்தேகப்படும்படியான குடிமகன்கள், அகதிகள் முகாம் இவையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதற்கு பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்று இவை சொல்ல வைக்கும். இன்றைக்கு மக்கள் தாங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அனைத்து விதமான அடையாள அட்டைகளை பெறுவதற்கு அவர்கள் வரிசையில் நிற்கின்றனர்.
பாகிஸ்தானின் விளம்பரத் தூதராக பாஜக செயல்பட்டு வருகிறது. எப்போது பார்த்தாலும் அவர்கள் பாகிஸ்தானை மட்டுமே பேசுகிறார்கள். இந்தியாவைப் பற்றி அவர்கள் பேசுவது கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரளாவில்தான் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற மாநிலங்களும் இவ்வாறு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேரளா அழைப்பு விடுத்திருந்தது.
இது மத்திய சட்டம் என்பதால் மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி பிரயோஜனம் இல்லை என்று பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இதற்கு கூட்டாட்சி தத்துவத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உதாரணமாக முன் வைத்துள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மாநில சட்டமன்றத்தில் நிறைவற்றப்படும் தீர்மானம் என்பது மாநில மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் கூறியுள்ளார்.
திருத்தப்பட்ட குடியுமை சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கேரள சட்டமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது என்று ஒவ்வொரு சட்டமன்றத்தின் கடமை என்றும் கூறியுள்ளது.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினர், மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு 2015-க்கு முன்பு வந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாததால், இந்த சட்டம் அவர்களுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.