This Article is From Dec 26, 2019

'நெருப்புடன் விளையாடாதீர்கள்!' - CAA விவகாரத்தில் பாஜகவை எச்சரிக்கும் மம்தா!!

குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.

'நெருப்புடன் விளையாடாதீர்கள்!' - CAA விவகாரத்தில் பாஜகவை எச்சரிக்கும் மம்தா!!

மத்திய கொல்கத்தாவின் ராஜா பஜாரிலிருந்து, முல்லிக் பஜார் வரையிலான பேரணியை மம்தா தலைமைதாங்கிசென்றார்.

Kolkata:

குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் தினந்தோறும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று மத்திய பாஜக அரசை திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எச்சரிக்கை செய்துள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வகையில், போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்க்கும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. இங்கு குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மத்திய கொல்கத்தா பகுதியில் உள்ள ராஜா பஜாரில் இருந்து முல்லிக் பஜார் வரை பேரணி நடத்தப்பட்டது. இதற்கு மாநில முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். பேரணிக்கு பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜ பேசியதாவது-

மத்தியில் ஆளும் பாஜக அரசு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடியபோது, போலீசார் நடவடிக்கையால் மங்களூருவில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை வழங்காமல் முதல்வர் எடியூரப்பா நிறுத்தி வருகிறார். இது கண்டிக்கத் தக்கது. 

மாணவர்கள் தங்களது போராட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். அவர்களுடன் நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். யாரைக் கண்டும் அச்சம் கொள்ள வேண்டாம். நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று பாஜகவை எச்சரிக்கிறேன்.

குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி.க்கு எதிராக போராடி வரும் ஜாமியா மில்லியா, ஐ.ஐ.டி. கான்பூர் உள்ளிட்டவற்றின் மாணவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு மம்தா பேசினார்.

கர்நாடகாவின் மங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 2பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்பது உறுதி செய்யப்படாத வரையில், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். 

.