கொல்கத்தாவில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வெடித்தது.
ஹைலைட்ஸ்
- 6 நாட்களாக மருத்துவர்கள் போராட்டம் நடந்து வருகிறது
- மம்தாதான் போராட்டத்திற்கு காரணம் என மத்திய அரசு புகார்
- போராட்டம் விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.
Kolkata/ New Delhi: போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களின் நியாயமான கோரிக்கை ஏற்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். இதையடுத்து மருத்துவர்களின் நாடு தழுவிய போராட்டம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில், உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர் ஒருவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மேற்குவங்க ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டிருக்கும், அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல், திறந்திருக்கும், எனினும், மருத்துவர்களின் வருகை குறைவால், அந்த சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா மருத்துவர்களுக்கு ஆதரவாக, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட ஏராளமான மாநிலங்களை சேர்ந்த மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், மருத்துவர்கள் தலையில் ஹெல்மட் அணிந்தபடியும், கட்டுகள் போட்டப்படியும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக, கொல்கத்தாவில் மாநில அரசால் நடத்தப்படும் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜூனியர் மருத்துவர்களை நேரில் சந்தித்த மம்தா பானர்ஜி, பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தினார். எனினும், மருத்துவர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், 'தங்களுக்கு நியாயம் வேண்டும்' என குரல் எழுப்பி, போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து, நோயாளிகள் தவிர்த்து, மற்றவர்கள் யாரும் மருத்துவமனை வளாகத்தில் இருக்க அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு மம்தா வலியுறுத்தினார். மேலும், இது குறித்து மம்தா பானர்ஜி கூறும்போது, பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் விடுதியில் இருந்து வெளியேறுமாறும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மருத்துவர்கள் ஸ்ட்ரைக் தீவிரம் அடைந்ததற்கு மம்தா பானர்ஜியே காரணம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் குற்றம்சாட்டியிருந்தார்.
நெருக்கடி அதிகரித்த நிலையில் மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.