மேற்கு வங்க பாஜகவின் தலைவராக இருப்பவர் திலிப் கோஷ்
Kolkata: பாகிஸ்தானின் பாலகோட்டில் தாக்குதல் நடத்தியது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி வருகிறார். இதனை விமர்சித்துள்ள பாஜக மாநில தலைவர் இந்தியாவை சேதப்படுத்த பாகிஸ்தான் தேவையில்லை. மம்தாவே போதும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பாலகோட்டில் நடந்த தாக்குதல் குறித்து திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களையும், அதில் உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கையையும் வெளியிடுமாறு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது பாஜக தலைவர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தங்கள் தரப்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் விமானப்படை தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஒட்டுமொத்த நாடும் புல்வாமா தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று விரும்பியபோது மம்தா பானர்ஜி விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களை கேட்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என்ன சொல்கிறாரோ அதையேதான் மம்தாவும் சொல்கிறார்.
இந்தியாவை சேதப்படுத்த பாகிஸ்தான் அரசும், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும் தேவையில்லை என்று நினைக்கிறேன். அதனை செய்வதற்கு மம்தா ஒருவரே போதும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.