மேற்கு வங்கத்தில் 2021-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
Kolkata: மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரசாரம் செய்த பிரசாந்த் கிஷோரை தனது ஆலோசகராக மம்தா பானர்ஜி ஒப்பந்தம் செய்துள்ளார்.
மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 150 தொகுதிகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வென்றது. சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்பது இதுவே முதல் முறையாகும்.
இதையடுத்து ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களை வகுத்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் கடந்த 2014-ல் மக்களவை தேர்தலின்போது மோடியின் பிரசார ஆலோசகராக இருந்தவர்.
சமீபத்தில்தான் பிரசாந்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மக்களவை தேர்தலில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில், 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை பிரசாரந்த் கிஷோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 2 மணி நேரமாக நீடித்தது. இதன்பின்னர் பிரசாந்தை தனது தேர்தல் பிரசார ஆலோசகராக நியமித்தும் மம்தா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 2021-ல் மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.