வடக்கு கொல்கத்தா பகுதியில் கொலைச் சம்பவம் நடந்திருக்கிறது.
Kolkata: மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் நிர்மல் குண்டு துப்பாக்கியில் வந்த நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வடக்கு கொல்கத்தா பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் நிர்மல் குண்டுவை சுட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொலை சம்பவத்திற்கு பாஜகவே காரணம் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனை பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் மறுத்திருக்கிறார். திரிணாமூல் காங்கிரசுக்குள் ஏற்பட்ட உள்கட்சி மோதல்தான் இந்த கொலைக்கு காரணம் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது.
2014 மக்களவை தேர்தலின்போது மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் பாஜக 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.