தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், அடுத்த அப்டேட் கொடுத்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெதர்மேன், ‘எதிர்பார்த்தது போலவே, நேற்று தான் சென்னையில் பதிவான ஒருநாள் மழை மிக அதிகமாக இருந்தது. இன்றும் சென்னையில் மழை தொடரும். நேற்று விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
அதேபோல இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், வேலூர், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை, இன்றும் மழை விட்டு விட்டு பெய்யும். சில நேரங்களில் கனமழை பெய்யக்கூடும். இதைப் போன்று சென்னைக்கு இன்னும் 4 அல்லது 5 மழை தேவை. அப்போது தான் சென்னையில் பருவமழை பொய்க்கவில்லை என்ற நிலை வரும்.
நேற்று நகரத்தில் அதிகபட்சமாக மாதவரத்தில் 100 மி.மீ மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 90 மி. மீட்டரும், புழல் பகுதியில் 90 மி. மீட்டர் மழையும் பெய்தது' என்று பதிவிட்டுள்ளார்.